Wednesday, May 11, 2005

அன்புள்ள தங்கைக்கு,

இன்னிக்கு Hepatitis B இஞ்ஜெக்ஷன் போட்டுக்கொள்ள போனேன். பேத்தியும் பயந்து கொண்டே வந்தாள். எனக்கு சின்ன வயதில் அப்பா காலரா இஞ்ஜெக்ஷன் போடும் வைபவம் ஞாபகத்துக்கு வந்தது. எங்கேயாவது காலரா வந்துவிட்டால் அப்பா நம் வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கெலாம் ஊசி போட்டு விடுவார். அப்பா டாக்டர் என்பதால் மற்றவர்களும் அவர் சொல்வதை அப்படியே கேட்பார்கள். எனக்கு சின்ன வயதில் ஊசி என்றாலே பயம். முதலில் அப்பா ஒரு பேஸினில் ஊசி போடும் பெரிய டியூபுகளை போட்டு வெந்நீரில் கொதிக்க வைப்பார். பிறகு ஊசியைப் பொறுத்தி மருந்தை ஊசியால் உறிஞ்சி எடுத்து பின்னர் அது சரியாக வருகிறதா என்று பார்ப்பார். கையில், பஞ்சில் ஸ்பிரிட்டை தோய்த்து தேய்த்துவிட்டு பிறகு ஊசியைக் குத்துவார். நான் இதெல்லாம் பார்த்தே எனக்கு ஊசி வேண்டாம் என்று அழ ஆரம்பிப்பேன். அப்பா எனக்கு சமாதானமாக "உனக்கு என்று மெல்லிசாக ஊசி வைத்திருக்கிறேன் பார். எறும்பு கடிக்கிறா போலதான் இருக்கும். வலிக்காது என்று சொல்வார். பேசிக்கொண்டே ஊசியைக் குத்திவிடுவார். ஒரு தரம் எனக்குக் கட்டை விரலுக்குப் பக்கத்தில் ஏதோ குத்தி வீங்கிக் கொண்டது. அப்பா அதை கீறி விட வேண்டும் - இல்லையானால் septic ஆகிவிடும் என்றார். நான் அப்பவே எனக்கு ஒண்ணும் பண்ண வேண்டாம் என்று அழ ஆரம்பித்து விட்டேன்.
நம் அப்பாவைப் பார்க்க முத்துப் பிள்ளை என்பவர் வாரம் முறை வருவார். அவருக்கும் இது மாதிரி ஊசிகளை வெந்நீரில் கொதிக்க வைத்து எல்லா ஏற்பாடுகளும் நடக்கும். எனக்காக கையில் கட்டியை கீறுவதற்காக எல்லா ஏற்பாடும் பண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் என்னிடம் முத்துப் பிள்ளைக்காக என்று சொல்லப்பட்டது. அம்மா ஒரு பக்கம் என்னைப் பிடித்துக்கொள்ள என் கையை ஆடாமல் அசங்காமல் கோபால் - அப்பாவின் அஸிஸ்டெண்ட்"- பிடித்துக் கொள்ள கட்டியைக் கீறி கட்டும் போட்டாகிவிட்டது. ஒரே அலறல்தான்.
அப்புறம் டிரெஸ்ஸிங் ஒரு வாரம் என்று என் வைத்தியம் நடந்தது. இப்போது கூட என் கட்டைவிரலில் ஒரு வடு மாதிரி இருக்கே? அதன் கதை அதுதான்.
இதுபோல், எனக்கு 15 வயது ஆனபோது அம்மா எனக்காக 8 கல் பேஸரி - வைர மூக்குப்பொட்டு வாங்கி மூக்குக் குத்திக்கொள்ள வேண்டும் என்றார். எனக்கு ஒரே கலக்கம். கொஞ்சம் பெரியவளாகிவிட்டேனே? குழந்தை மாதிரி அழமுடியுமா என்ன? ஆனாலும் அம்மாவிடம் சொன்னேன். ரொம்ப வலிக்கும்மா... கொஞ்சம் மயக்க மருந்து கொடுத்துவிட்டு பிறகு மூக்கைக் குத்டுங்கள் என்றேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒரு வாரத்துக்கு இதுதான் எல்லோருக்கும் ஜோக். ஹ்ம்ம்.. அப்புறம் வலிக்க வலிக்க குத்திக்கொண்டுவிட்டேன் என்பது வேறு கதை.
********* *********** ************தீபாவளி சமயம் இன்னும் வரவில்லை. ஆனாலும் என் நினைவு அந்த நாளில் தீபாவளி கொண்டாடியதை அசை போடுகிறது. அப்போதெல்லாம் பண்டிகை என்றாலே ஒரே சந்தோஷம்தான். அதுவும் தீபாவளி - கேட்கவே வேண்டாம். விடியற்காலையில் எழுந்து இருட்டிலேயே குளித்துவிட்டு புதுசு கட்டிக்கொண்டு பட்சணங்கள் சாப்பிடுவது, பட்டாசு கொளுத்துவது என்று எல்லாமே சந்தோஷமாக இருக்கும்.
கல்யாண வீடு மாதிரி வீட்டுக்கு வீடு நாதசுவரம் வந்து வாசிப்பார்கள். வாழ்த்து தெரிவிக்க எல்லோரும் நம்ம வீட்டுக்கு வருவார்கள். நாமும் எல்லோர் வீட்டுக்கும் பட்சணத்தட்டை எடுத்துக் கொண்டு போய் வாழ்த்துக்கள் தெரிவிப்போம். இந்தக் கால குழந்தைகளுக்குத் தெரியாத சந்தோஷம் இது.
சாதாரண புது துணி போட்டுக் கொண்டால் கூட நாம் ராஜகுமாரி என்ற நினைப்பு நமக்கு. புதுத் துணி போட்டுக் கொண்டொஇருக்கிறோம் என்பதுதான் மகிழ்ச்சி. அது உயர்ந்ததோ, மலிவோ என்பதெல்லாம் யோசித்துக் கூட பார்த்தது இல்லை.
இந்த சமயத்தில்தான் எனக்கு 7 வயது இருக்கும்போது ஒரு முறை என் பாவாடையில் பட்டாசு பட்டு நெருப்பு பற்றிக் கொண்டது. அப்பா கூடவே நின்று கொண்டிருந்தார். நான் சாட்டையோ, கம்பி மத்தாப்போ கொளுத்தியபடி இருந்தேன். பொறி பட்ட உடனே அப்பா கவனித்துவிட்டார். நெருப்பு பெரிதாக ஆகும் முன்பு சட்டென்று தன் இரண்டு கைகளாலும் நெருப்பு பற்றிக்கொண்ட பாவாடையைப் பிடித்து கசக்கினார். இதனால் எனக்கு உடம்பில் ஒன்றும் காயம் படாமல் தப்பித்தேன். ஆனால் பாவம், அப்பா கையெல்லாம் புண்ணாகிவிட்ட்து. நீலமாக ஏதோ கைகளில் தடாவிக் கொண்டார். பிறகு புண்ணும் ஆறிவிட்டது.

மற்றவை பின்.
அன்புள்ள அக்கா

Sunday, May 01, 2005

அன்புள்ள தங்கைக்கு,

என் பேரன் அமெரிக்காவிற்கு மேல் படிப்பு படிக்கப் போகிறான். அவன் இன்று கேட்ட கேள்விக்கு நான் நீண்ட பதில் சொல்லும்படியாக ஆயிற்று. பணம் எவ்வளவு முக்கியம்? பணம் இருந்தால்தான் மதிப்பா? பணம் நிறைய சம்பாதிப்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோளா? இவை அவன் கேள்விகள்.
பணம் முக்கியம்தான். முக்கியமான தேவைகளுக்கு கூட பணம் இல்லாவிட்டால் கஷ்டம். முக்கியமான தேவைகள் என்பது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. பெரிய சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் - அடிப்படை தேவை, சாப்பாடு, உடை, தங்குவதற்கு நிழல் இவை அவசியம்தான் என்று.
ஏழை நினைக்கிறான்; கூழ் சாப்பிட உப்பும், உடம்பு அமர ஓலை குடிசையும் உடுத்திக்கொள்ள துணியும் இருந்தால் போதும் என்று. அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்று சொல்கிறார்கள். அளவு என்பது தனி மனிதனின் எண்ணம். ஆனால் நமக்கு மேலே இருக்கிறவர்களை பார்த்து அந்த மாதிரி உயர்ந்த சாமான்கள் இல்லையே; ஆடம்பரமான வீடு, உடைகள் நகைகள் இல்லையே என்று நினைக்கக் கூடாது.

ஆமாம் பணம் இருந்தால் நான் பணக்காரன் என்று எல்லோரும் மதிக்கிறார்கள். ஆனால் வெறும் பணம் இருப்பதாலேயே மதிக்கிறார்கள் என்று சோல முடியாது.பணம் என்பது செல்வம். இதை செலவழித்து மற்றவர்களுக்கு உபயோகமாகும்போது அது உயர்ந்த பொருளாக ஆகிறது. குணமும் இருந்தால்தான் பணம் உயர்ந்ததாக ஆகிறது.

பணம் சம்பாதிப்பது அவசியம்தான் ஆனால் நாம் நமக்காக மட்டும் சம்பாதிக்காமல் தன் குடும்பத்தாருக்காகவும் மற்றவர்களுக்காகவும் சம்பாதிப்பதில்தான் பெருமை இருக்கு. நாம் மட்டும் சந்தோஷமாக இருந்து கொண்டு மற்றவர்கள் கஷ்டபப்ட்டுக் கொண்டிருந்தால் பார்க்க கஷ்டமாக இருக்கும். மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்காகவும் சம்பாதிக்கும்போதுதான் நாம் சம்பாதிப்பதில் அர்த்தம் இருக்கிறது.
சிலர் சொல்வார்கள் - பணத்தைக் கொண்டு அம்மா அப்பாவை வாங்க முடியாது என்று. ஆனால் பணத்தால் வரும் வசதிகளால் அவர்களைத் திருப்திபடுத்த முடியும். சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் கடைக்கு போய் பணம் கொடுத்து சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியாதுதான்.

**************

இன்றைக்கு ரொம்ப நாள் கழித்து என்னுடைய 42 வருட சினேகிதி போனில் கூப்பிட்டாள். நாங்கள் வடக்கே இருந்தபோது எதிர் எதிர் வீடில் இருந்தோம். காலையில் 11 மணி அளவில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வாசலுக்கு வருவோம். அவள் வீட்டு புல் தரையில் அரை மணி நேரம் பேசிக் கொள்வோம். அன்றைய சமையல், குழந்தைகள், உடம்பு நிலை என்று தினம் பேசுவதற்கு ஏதாவது இருக்கும். இந்த தினசரி பேச்சுக்களல் எங்கள் இரண்டு பேருடைய மனதுக்கும் கிடைத்த சந்தோஷம், நிம்மதிக்கு அளவு கிடையாது. வேறு ஊர்களுக்கு மாற்றலாகிப் போனாலும் கடிதம் மூலமாவது தொடர்பு கொண்டிருந்தோம். இப்போ வயதான பிறகு ஒரே உர்ரில் இருக்கிறோம். அதனால் இப்போதும் போனில் பேசிக் கொள்கிறோம். நேரில் சந்திப்பது குறைவுதான். ஆனாலும் போனில் பேசுவதே சந்தோஷமாக இருக்கிறது.
அவள் பெண்ணும் மாப்பிள்ளையும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். பிள்ளையும் மருமகளும் டில்லியில் இருக்கிறார்கள். பிள்ளை, பெண் இவர்களிடமிருந்து போன், ஈமெயில் வரவில்லையென்றால் கவலைப் படுவாள். கடந்த 2 வருடங்களாக மாற்றல் ஆகி பென்ணும் மாப்பிளையும் இதே ஊருக்கு வந்திருந்தார்கள். அதனால் பேரன் பேத்தியுடன் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். - வயதான இயலாமை இருந்தாலும், நாம்தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கணவன் மனைவி இரண்டு பேருமே அவர்களுக்கு உபகாரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போ அவர்கள் மீண்டும் அமெரிக்க திரும்பிவிட்டார்கள்.

வீடு யாருமே இல்லாத மாதிரி வெறிச்சோடி போயிற்று. என்னுடன் பேசினால் மனசு சமாதானமாக இருக்கும் என்று பேசினாள். குழந்தைகள் நம்ம்முடன் இருக்கப் போவதில்லை. வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள், பாசம் இருகக்கூடாது என்றும், தெய்வம்தான் சாஸ்வதம் என்றும் படிக்கிறோம். ஆனாலும் குழந்தைகள் இந்த நேரம் என்ன செய்து கொண்டிருப்பார்கள், யாரை யார் தொந்திரவு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள், சரியாக சாப்பிடுகிறார்களா, என்று இந்த மாதிரி கவலைகள் என்று என்னுடன் பகிர்ந்து கொண்டாள். நானும் வள் மாதிரிதான்., இந்த மாதிரி பலஹீனங்கள் படுத்தும். ஆனால் அன்றைக்கு நான் தெம்பாக இருந்ததால் சொன்னேன்; " நாம் கதா கால§க்ஷபத்திற்கு போகிறோம். கதை சொல்பவர் சொகிறார். மனிதனாக பிறந்த பிறகு மனதைக் கட்டுப் படுத்திக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். நமக்கு தித்திப்பு பிடிக்கிறது என்றால் இன்னும் வேண்டும் என்று சாப்பிடுகிறோம். சரீரத்தில் ஏதாவது புண் வந்தால் சரியாக ஆறுவதற்கு முன் அரிக்க ஆரம்பிக்கிறது. சொறிந்தால் புண் ஆறாமல் இன்னும் ஜாஸ்தியாகும் என்றும் நமக்கு தெரியும். ஆனாலும் சொறிந்தால் இதமாக இருக்கிறது என்று சொறிகிறோம். இந்த பந்தம் பாசம் எல்லாமும் அப்படிதான். அதில் ஊறிப்போனால் எதிர்பார்ப்புகள் வரும். எதிர்பார்த்து கிடைக்கவில்லையானால் வருத்தப் படுகிறோம். அதற்காக சம்சாரத்தில் இருப்பவர்கள் சம்சாரத்தில்தான் சாரமாக இருக்க முடியும்; சந்நியாசி ஆகமுடியாது. சம்சாரிக்கு சம்சாரத்திலும், சந்நியாசிக்கு சன்நியாசத்திலும்தான் சாரம் இருக்கிறது. இராமாயணத்தில் லக்ஷ்மணருக்கு ராமர் சொல்கிறார். நான் பகவானாக இருந்தாலும் மனிதனாக பிறந்திருப்பதால் அனுபவிப்பதை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று.

ஒரு வயதான கிழவி ரொம்ப வருசஹ்ங்களாக மண் பானையும் விளக்குமாறும் உபயோகபப்டுத்தி வந்தாள். ஒரு நாள் பானையும் இடைந்து போயிற்று. விளக்குமாறும் பிய்ந்து போயிற்று. அவளுக்கு துக்கம் தாங்கமுடியவில்லை. பகவனை நோக்கி அழுகிறாள். அப்போது பகவான் அவளிடம் ஏன் அழுகிறாய்; உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பாட்டி உடையாத பானையும் பிய்ந்து போகாத விளக்குமாறும் என்று கேட்டாளாம். அப்பவும் பகவாந்தான் சாஸ்வதம் என்று புரியாமல், கேட்க்க தோன்றாமல், இந்த லோக வஸ்துக்களே அவளுக்கு முக்கியமாகப் பட்டிருக்கிறது!! இப்படித்தான் நாமும் நிஜம் இதுதான் என்று தெரிந்தும், பாசம், பந்தம் ஆசையென்று திரிந்து கொண்டிருக்கிறோம்.

****************

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது இந்த என் 63 வயதில் நன்றாகவே தெரிகிறது. தெய்வத்தை வணங்குகிறோம்; நேசிக்கிறோம். பெரியவர்கள் சொல்கிற மாதிரி தெய்வத்தை தேடி எங்கேயும் போக வேண்டாம். மந்துக்குள்ளேயேதான் இருக்கிறார். ஆனால் கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு வருத்தமாக அதை மறந்து விடுகிறோம். தெய்வத்தை அலங்கரித்து ஆராதனை செய்தால் மனம் நிறைவாகிறது.

அது மாதிரி சின்னக் குழந்தையப் பார்த்தவுடன் அதன் சிரிப்பு நமக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. தூக்கி வைத்துக் கொண்டாடினால் மாந்துக்கு நன்றாக இருக்கிறது. சில வருடங்கள் முன்பு வரை என் குழந்தைகளும் குழந்தைகளாக /சிறியவர்களாக இருந்தார்கள். ஆனால் சம்சாரத்தில், வீட்டு வேலைகள் நாள் பூரா ஏதாவது இரூந்து கொண்டிருக்கும். அப்போதெல்லாம், குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுப்பது, குளிப்பாட்டுவது எல்லாமே கூட ஏதோ வேலையின் பளுவாகதான் இருந்ததே தவிர, வேறு ஒன்றும் தோன்றியதில்லை. போதாததுக்கு அந்த காலத்தில் குழந்தை வளர்ப்பு தாயின் கையில் மட்டுமே இருந்தது. அம்மா சொல்வார்; இப்படி வளர்த்து விட்டிருக்காளே என்று அம்மாவைதான் குறை கூறுவாஅர்கள். குழந்தைகளுக்கு கெட்ட பெயர் என்றால் அம்மாவுக்கும் சேர்த்துதான் என்று.

அதனால் குழந்தைகளை ஒருவித யந்திரத்தனத்தோடு வளர்த்தோமோ என்று தோன்றும். இன்று அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டனர்.
பேரன் பேத்தி பிறந்து விட்டார்கள். இப்போ அவர்களை நான் ரசிக்கிறேன். ஒவ்வொரு அசைவிலும் படியிலும் நிறைய வித்தியாசங்கள். என்னுடைய பேத்தியோடு இப்போ நிறைய பொழுதுகளை கழிக்கிறேன். அவளுக்கு கதை கேட்க பிடிக்கும். பாட்டு கேட்பது / பாடுவது பிடிக்கும். நான் ஏதாவது கைவேலை செய்தால் பார்த்து ரசித்து தானும் அதுபோல் செய்ய ஆசைப்படுவாள். நான் தலைவலி, கால்வலி என்று படுத்தால் உடனே கையை / தலையைப் பிட்த்துவிடுகிறேன் என்பாள். மொத்தத்தில் நானும் அவளும் சினேகிதிகள் மாதிரி.

இன்னிக்கு ஏதோ ஒரு chart வரைந்து ஸ்கூலுக்கு எடுத்துப் போனாள். அவள் வரையும்போதே நான் பார்த்திருந்தேன். இருந்தாலும் முடிந்தவுடன் பார்க்கவில்லை. ஸ்கூல் போகும் அவசரத்தில் எடுத்து வைத்துக் கொண்டுவிட்டாள். ஆனால் போகும்போது என்னிடம் வந்து " பாட்டி, sorry பாட்டி, உங்களிடம் காண்பிக்காமல் எடுத்டு போகிறேன். ஸ்கூலில் காண்பித்துவிட்டு மறுபடி வீட்டுக்கு கொண்டுவருவேன். அப்போ நீங்க பார்க்கலாம்" என்றாள். பாவம், குழந்தைக்குதான் எவ்வளவு பாசம்?

**********************

நம் அம்மா நம்மை எப்படி வேலைகள் செய்ய பழக்கினார் என்று நினைவிருக்கா? நவராத்திரி, தீபாவளி என்று பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் போதும். நிறைய வேலைகள் வந்துவிடும்.
6 வயது முதலே அம்மா எனக்கு சமையல் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் அம்மா. பழைய நாட்கள் வழக்கப்படி அம்மா மாத விலக்கு இருக்கும் மூன்று நாட்கள் நான்தான் சமையல். நான் சின்னவளாக இருந்தபோது அம்மா புளிக்காய்ச்சல், தேங்காய்பொடி பருப்புப் பொடி என்று செய்து வைத்திருப்பாள். சாதம் மட்டும் பெரிய வெங்கலப்பானையில் கரி அடுப்பில் நேராக வைக்க வேண்டும். காபி பில்டரில் காபி போட வேண்டும். 8 - 9 வயது ஆனபிறகு குழம்பு, ரசம், காய் எல்லாம் செய்யக் கற்றுக் கொடுத்தார். எல்லாமே ஒரு பயத்தில் கற்றுக் கொண்டேன்.

பண்டிகை நாள் வந்துவிட்டால் அம்மாவுடன் சமையல் அறையிலேயே இருக்க வேண்டும். அம்மா மாவு சலிக்க பேப்பர் கொண்டு வா என்பார்; பிறகு அதை சல்லடையில் சலிக்க வேண்டும். சர்க்கரை கொண்டுவா, நெய் டப்பாவை எடுபென்று ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார். சரி; கொஞ்சம் வெளியில் போய் நிற்கலாம் என்று போக ஆரம்பித்தால், ஏலக்காய் பொடி பண்ணு, முந்திரிப் பருப்பு சின்னதாக ஒடி என்பார். ஆக மொத்தம் எல்லா சாமான்களையும் எடுத்து கொடுத்து ஒத்தாசை பண்ணிக் கொண்டே அம்மா படசணம் பண்ணும் விதமும் மனதில் நன்றாக ரிகார்ட் ஆகிவிடும். சரி, அதான் அம்மா பட்சணம் பண்ணியாச்சே, நாம கொஞ்சம் வெளியெலே போகலாம் என்று பார்த்தால், உடனே அம்மா " பட்சணங்கள் எடுத்து வைக்க டப்பாவை துடைத்து எடுத்து வா" என்பார். ஆக மொத்தம் அம்மாதான் பண்ணியிருக்கிறார். ஆனா நாம்பளும் வேலைஅயைக் கற்று கொண்டுவிடுவோம்.

இப்படி கற்றுகொண்டதுதான் புக்ககம் போனபோது சௌகரியமாக இருந்தது. என்னுடைய மச்சினர் வந்தபோது என் மாமியார் அவருக்கு முதன் முறையாக ஸ்வீட் பண்ண சொன்னார். அம்மா செய்ததெல்லாம் ஞாபகத்துக்கு வர, மைதாவும் பாலும் சர்க்கரையும் கலந்து கேசரி பவுடர் போட்டு நெய் குத்தி கிளறி அல்வா செய்து கொடுத்தேன். என் மச்சினர் நன்றாக செய்திருக்கிறாய் - இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டாரே, பார்க்கணும் !!

மொத்தமாக ஒரு பெரிய கடிதம் அனுப்பிவிட்டேன். அடுத்து நேரம் கிடைக்கும்போது, நினைவுக்கு வரும் விஷயங்களை இன்னும் எழுதி அனுப்புகிறேன்.

உன் அன்புள்ள அக்கா.