Wednesday, May 11, 2005

அன்புள்ள தங்கைக்கு,

இன்னிக்கு Hepatitis B இஞ்ஜெக்ஷன் போட்டுக்கொள்ள போனேன். பேத்தியும் பயந்து கொண்டே வந்தாள். எனக்கு சின்ன வயதில் அப்பா காலரா இஞ்ஜெக்ஷன் போடும் வைபவம் ஞாபகத்துக்கு வந்தது. எங்கேயாவது காலரா வந்துவிட்டால் அப்பா நம் வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கெலாம் ஊசி போட்டு விடுவார். அப்பா டாக்டர் என்பதால் மற்றவர்களும் அவர் சொல்வதை அப்படியே கேட்பார்கள். எனக்கு சின்ன வயதில் ஊசி என்றாலே பயம். முதலில் அப்பா ஒரு பேஸினில் ஊசி போடும் பெரிய டியூபுகளை போட்டு வெந்நீரில் கொதிக்க வைப்பார். பிறகு ஊசியைப் பொறுத்தி மருந்தை ஊசியால் உறிஞ்சி எடுத்து பின்னர் அது சரியாக வருகிறதா என்று பார்ப்பார். கையில், பஞ்சில் ஸ்பிரிட்டை தோய்த்து தேய்த்துவிட்டு பிறகு ஊசியைக் குத்துவார். நான் இதெல்லாம் பார்த்தே எனக்கு ஊசி வேண்டாம் என்று அழ ஆரம்பிப்பேன். அப்பா எனக்கு சமாதானமாக "உனக்கு என்று மெல்லிசாக ஊசி வைத்திருக்கிறேன் பார். எறும்பு கடிக்கிறா போலதான் இருக்கும். வலிக்காது என்று சொல்வார். பேசிக்கொண்டே ஊசியைக் குத்திவிடுவார். ஒரு தரம் எனக்குக் கட்டை விரலுக்குப் பக்கத்தில் ஏதோ குத்தி வீங்கிக் கொண்டது. அப்பா அதை கீறி விட வேண்டும் - இல்லையானால் septic ஆகிவிடும் என்றார். நான் அப்பவே எனக்கு ஒண்ணும் பண்ண வேண்டாம் என்று அழ ஆரம்பித்து விட்டேன்.
நம் அப்பாவைப் பார்க்க முத்துப் பிள்ளை என்பவர் வாரம் முறை வருவார். அவருக்கும் இது மாதிரி ஊசிகளை வெந்நீரில் கொதிக்க வைத்து எல்லா ஏற்பாடுகளும் நடக்கும். எனக்காக கையில் கட்டியை கீறுவதற்காக எல்லா ஏற்பாடும் பண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் என்னிடம் முத்துப் பிள்ளைக்காக என்று சொல்லப்பட்டது. அம்மா ஒரு பக்கம் என்னைப் பிடித்துக்கொள்ள என் கையை ஆடாமல் அசங்காமல் கோபால் - அப்பாவின் அஸிஸ்டெண்ட்"- பிடித்துக் கொள்ள கட்டியைக் கீறி கட்டும் போட்டாகிவிட்டது. ஒரே அலறல்தான்.
அப்புறம் டிரெஸ்ஸிங் ஒரு வாரம் என்று என் வைத்தியம் நடந்தது. இப்போது கூட என் கட்டைவிரலில் ஒரு வடு மாதிரி இருக்கே? அதன் கதை அதுதான்.
இதுபோல், எனக்கு 15 வயது ஆனபோது அம்மா எனக்காக 8 கல் பேஸரி - வைர மூக்குப்பொட்டு வாங்கி மூக்குக் குத்திக்கொள்ள வேண்டும் என்றார். எனக்கு ஒரே கலக்கம். கொஞ்சம் பெரியவளாகிவிட்டேனே? குழந்தை மாதிரி அழமுடியுமா என்ன? ஆனாலும் அம்மாவிடம் சொன்னேன். ரொம்ப வலிக்கும்மா... கொஞ்சம் மயக்க மருந்து கொடுத்துவிட்டு பிறகு மூக்கைக் குத்டுங்கள் என்றேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒரு வாரத்துக்கு இதுதான் எல்லோருக்கும் ஜோக். ஹ்ம்ம்.. அப்புறம் வலிக்க வலிக்க குத்திக்கொண்டுவிட்டேன் என்பது வேறு கதை.
********* *********** ************தீபாவளி சமயம் இன்னும் வரவில்லை. ஆனாலும் என் நினைவு அந்த நாளில் தீபாவளி கொண்டாடியதை அசை போடுகிறது. அப்போதெல்லாம் பண்டிகை என்றாலே ஒரே சந்தோஷம்தான். அதுவும் தீபாவளி - கேட்கவே வேண்டாம். விடியற்காலையில் எழுந்து இருட்டிலேயே குளித்துவிட்டு புதுசு கட்டிக்கொண்டு பட்சணங்கள் சாப்பிடுவது, பட்டாசு கொளுத்துவது என்று எல்லாமே சந்தோஷமாக இருக்கும்.
கல்யாண வீடு மாதிரி வீட்டுக்கு வீடு நாதசுவரம் வந்து வாசிப்பார்கள். வாழ்த்து தெரிவிக்க எல்லோரும் நம்ம வீட்டுக்கு வருவார்கள். நாமும் எல்லோர் வீட்டுக்கும் பட்சணத்தட்டை எடுத்துக் கொண்டு போய் வாழ்த்துக்கள் தெரிவிப்போம். இந்தக் கால குழந்தைகளுக்குத் தெரியாத சந்தோஷம் இது.
சாதாரண புது துணி போட்டுக் கொண்டால் கூட நாம் ராஜகுமாரி என்ற நினைப்பு நமக்கு. புதுத் துணி போட்டுக் கொண்டொஇருக்கிறோம் என்பதுதான் மகிழ்ச்சி. அது உயர்ந்ததோ, மலிவோ என்பதெல்லாம் யோசித்துக் கூட பார்த்தது இல்லை.
இந்த சமயத்தில்தான் எனக்கு 7 வயது இருக்கும்போது ஒரு முறை என் பாவாடையில் பட்டாசு பட்டு நெருப்பு பற்றிக் கொண்டது. அப்பா கூடவே நின்று கொண்டிருந்தார். நான் சாட்டையோ, கம்பி மத்தாப்போ கொளுத்தியபடி இருந்தேன். பொறி பட்ட உடனே அப்பா கவனித்துவிட்டார். நெருப்பு பெரிதாக ஆகும் முன்பு சட்டென்று தன் இரண்டு கைகளாலும் நெருப்பு பற்றிக்கொண்ட பாவாடையைப் பிடித்து கசக்கினார். இதனால் எனக்கு உடம்பில் ஒன்றும் காயம் படாமல் தப்பித்தேன். ஆனால் பாவம், அப்பா கையெல்லாம் புண்ணாகிவிட்ட்து. நீலமாக ஏதோ கைகளில் தடாவிக் கொண்டார். பிறகு புண்ணும் ஆறிவிட்டது.

மற்றவை பின்.
அன்புள்ள அக்கா

0 Comments:

Post a Comment

<< Home