Friday, October 29, 2004

அன்புள்ள தங்கைக்கு,

நான் சின்ன வயதில் நம் தாத்தா பாட்டி கிராமத்தில்தான் நிறைய இருந்திருக்கிறேன். இதற்கு 2 காரணங்கள். ஒன்று, தாத்தா ஊர் 10 மைல் அளவில் பக்கத்தில் இருந்தது. ரெண்டாவது, நான் நம்ம அம்மாவின் 16 ம் வயதிலேயே பிறந்தது. அம்மாவுக்கு என்ன யாராவது பார்த்துக்கொள்ள மாட்டார்களா என்று இருந்திருகும் போல. அதோட பாட்டிக்கும் என்னை அழைத்து வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும். தாத்தா ஊர் சின்ன கிராமம். அகரஹாரம் என்பதில் மொத்தம் 8 வீடுகள். நம் தாத்தா வீடு தவிர இன்னும் ஓரிரண்டு வீடுதான் மாடியோடு காரை கட்டிடம். மீதியெல்லாம் மண் வீடு மேலே ஓடு போட்டிருக்கும். எல்லா வீட்டுக்காரர்களும் ஒருவருக்கொருவர் உறவுக்காரர்கள்.
தெருவில் ஒரு கோடியில் சிவன் கோவில். இன்னொரு கோடியில் பெருமாள் கோவில். பெருமாள் பெயர் நவநீத கிருஷ்ணன். கோவில் பக்கத்திலேயே மடைப்பல்ளி இருக்கும். கோவிலுக்கு கொஞ்சம் தள்ளி வாய்க்கால் ஓடும். 3, 4 படிக்கட்டு உண்டு. இந்த வாய்க்காலிலிருந்துதான் தாத்தா வீட்டு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்க்கள். அந்த வயல்களில் விவசாயம் செய்யும் குடியான தம்பதிகள் வீரப்பனும், அவன் மனைவி செம்பாயியும். செம்பாயிதான் மாடுகளைப் பராமரிப்பஹ்டு, மாட்டுத் தொழுவம் போன்ற வேலைகளை கவனிப்பது. பாலும் கறந்து கொடுப்பாள். காலை வேளையில் வீரப்பன் சால் சாலாக தண்ணீர் இறைக்கும்போது நாங்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நஞ்சன் கூடு பல் பொடியால் பல் தேய்ப்போம். சால் தன்ணீர் சின்ன வாய்க்கால் வழியே ஓடி வரும்போது அள்ளி அள்ளி வாய் கொப்பளிப்போம். அப்போதெல்லாம் தண்ணீர் இப்போ போல் கெடுதல் செய்யாது. பளிங்கு போல் சுத்டமாக ஓடி வரும் தண்ணீர் தித்திப்பாக இருக்கும். நான் பல் தேய்த்து முடிப்பதற்கும் தயிர்க்கார சின்னம்மா வருவதற்கும் சரியாக இருக்கும். உடல் பெருமன் அளவில் பாட்டியும் அவளும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். தயிர் அளந்து ஊற்ற கொட்டாங்கச்சியை நன்றாக தேய்த்து மழமழவென்று வைத்திருப்பாள். எனக்கு கையில் தயிர் கொடுத்தால்தான் அவளுக்கு சந்தோஷம். அந்த நாளில் கள்ளம் கபடு அறியாது இருந்தோம். பெரியவர்களும் அப்படியே இருந்தார்கள்.
பாட்டிதான் என்றாலும் நான் ஒருத்திதான் கூடவே இருந்தேன் என்பதால் கண்டிப்பாகவே இருப்பார். அடிக்கடி அவர் சொல்வார்: " உண்க செல்லம்; உடுக்க செல்லம். ஆனால் சொன்ன வார்த்தைக் கேட்க வேணும்" என்பார். 50 வருஷம் முன்னால் கிராமங்களில் மின்சாரம் கிடையாது. தோட்டங்கள் மாமரங்களோடு நிறைய இருக்கும். ஆனால் அப்பவே தாத்தா தண்ணீர் பம்பு போட்டிருந்தார். கிணற்றிலிருந்து குழாய் வழியாக தண்ணீர் அருவியாகக் கொட்டுவது வேடிக்கையாக இருக்கும். அதைப் பார்ப்பதற்கு என்று தோட்டத்துக்கு போவோம். மாமரம் பூத்து வாசனை வந்து கொண்டிருக்கும். பிஞ்சு மாங்காய்கள் கிலைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். சிலது தரையில் விழுந்து பால் வாசனையுடன் இருக்கும். நல்ல குளுமையான காற்று. விலை மதிப்பிலாதது - மின்சாரக் காற்று இல்லை!
அக்ரஹாரத்தில் பெருமாள் கோவில். காலை மாலை இரண்டு வேளையும் நாயனகாரர்கள் வந்து வாசிப்பார்கள். காலையில் தயிர் சாதமும் மாலையில் கொத்துக் கடலை சுண்டலும் பிரசாதம். அந்தக் கோவில் அர்ச்சகரும் நம் உறவுக்காரர்தான். அவர் மடைப்பள்ளியில் மண் சட்டியில் சாதம் பண்ணி, தயிர் சாதமாக நைவேத்தியம் செய்வார். அந்த சமயத்தில் நானும் குளித்துவிட்டு மேள சத்தம் கேட்டவுடன் கோவிலுக்கு ஓடிப்போய் கை கூப்பி நின்று கொள்வேன். எல்லோருக்கும் தீர்த்தம், சடாரி ஆகி, கையில் "தொத்தியோன்னம்" கிடைக்கும் - சுடச்சுட. அது ஒரு தனி வாசனைதான். காரணம் மண் பானையா அல்லது கோவில் மாமா சாதத்தைக் காந்த விடுவதாகென்று தெரியாது. அந்த கோவில் மேளக்காரர்கள் பூஜை சமயத்தில் மேளம் வாசிப்பதும் பிற நேரங்களில் முடி திருத்துபவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வீடுகளில் கோவிலில் நடனம் ஆடும் பெண்களும் இருப்பார்கள்.
மாலையில் 6 மணிக்கு விளக்கு ஏற்றி சாயிந்தர பூஜை நடக்கும். நாயனம், சுண்டல் பிரசாதம் எல்லாம் ஆனபின் கோவிலைப் பிரதட்சிணம் பன்ணிவிட்டு வீட்டு வாசலில் நிற்கும் பாட்டியிடம் துளசியும் சுண்டலும் கொடுப்பேன். கோவிலுக்கும் நம் வீட்டிற்கும் ஒரு வீடு தூரம்தான். கோவில் தீபாராதனை நடக்கும்போது பாட்டி வீட்டு வாசற்படியிலேயே நின்று பெருமாளை சேவிப்பார். கோவிலுக்கு ஒரு நாளும் வந்ததில்லை.
உண்ண செல்லம் உடுக்க செல்லம் என்று சொன்னேனா? நம் வீட்டுக்குப் பின்னால் நிரைய தென்னை மரங்கள் இருந்தன. காலையில் குளிக்க வெந்நீர் போட அடுப்பில் தென்னை மர சாமான்கள் - பாளை, பன்னாடை, கொட்டாங்கச்சி போன்றவைதான் எரிபொருள். தவலையில் வெந்நீர் சுட்டுக் கொண்டேயிருக்கும். குளியலறையும் கரி படிந்து கறுப்பாக இருக்கும். குடியானவனிடம் சொல்லி தேங்காய், இளநீர் எல்லாம் பறிக்க சொல்வார் பாட்டி. இளம் தேங்காய்த் தயிர் பச்சிடி. அப்புறம் தேங்காயை அரைத்து பால் பிழிந்து பால் கொழுக்கட்டை செய்வார் பாட்டி. புழுங்கலரிசி, ஒட்டிக்கொல்ள கொஞ்சம் உளுத்தம்பருப்பு கொஞ்சமாக சேர்த்து தயிரில் ஊற வைத்து தேங்காய் உப்பு மிளகாயுடன் அரைத்து அரிசி வடை செய்வாள். எல்லாம் எனக்காகதான்.
இதை தவிர இளநீர் கணக்கில்லாமல் குடிக்கலாம். எவ்வளவு இனிமையான காலம் ! வீட்டுக் கினற்றில் தன்ணீர் நிறைய இருந்தாலும் ஓடுகிற வாய்க்காலில்தான் பாத்திரங்கள் தேய்ப்பதும் குளிப்பதும். தாத்தா பாட்டி மட்டும் வீட்டில் குளியல். பசு மாடுகள் 5, 6 எப்போதும் வீட்டில் இருக்கும். மாத்தி மாத்தி ஏதாவது ஒரு பசு மாடு கன்று போட்டு பால் கொடுத்துக் கொண்டே இருக்கும். பால் தயிருக்கு குறைவேயில்லை.
கூடம் ரொம்பப் பெரிதாக இருந்ததால் அக்ரஹாரக் கல்யாணங்கள் இங்கேதான் நடக்கும். ஒரு தரம் அஹோபில மட ஜீயர் அவர் பரிவாரங்களுடன் நம் வீட்டில்தான் ஒரு வாரம் தங்கினார்.
நம் கிராமம் பக்கத்தில் 2 மைல் தூரத்தில் திருநாராயண பெருமாள் கோவில் இருக்கு. கோவிலிருந்து கொஞ்ச தூரம் போனால் அகண்ட காவேரி. 1 அல்லது 1 1/2 மைல் அகலம் ஓடிக்கொண்டிருந்தது. கிராமத்திலிருந்து கோவிலுக்கு போகும் வழியில் ரெண்டு பக்கமும் கொடிக்கால் இருந்தது - அதாவது ஆத்திக்கீரை மரமும் அதன் மேல் வெற்றிலை கொடியைப் படர விட்டிருப்பார்கள். ஒரு பக்கம் வாழை மரங்கள். நெல் வயல்கள் பசுமைஅயாக இருக்கும். எல்லாத்துக்குமே தன்ணீர் நிறைய வேண்டும் என்பதால் எப்பவும் வாய்க்கால் நீர் பாய்ந்து கொண்டே இருக்கும். அதனால் மாட்டு வண்டியில் நாங்கள் திருநாராயணபுரம் போகும்போது தண்ணீர் சத்தமும் பச்சை வாசனையும் பூச்சிகள் சத்தமும் குகுளுவென்று இருக்கும். சில சம்யம் ரோடு நடுவே ஒரு பக்கமிருந்து மறுபக்கத்துக்கு தண்ணீர் பாம்பு ஓடும்.
பிரகலாதனுக்கு சாந்தமாக பெருமாள் காட்சி தந்த திருத்தலம் இது. நிறைய உற்சவம் நடக்கும். தேர் இழுப்பார்கள். நான்கூட இழுத்திருக்கிறேன்.
பாட்டி தாத்தா காலத்துக்கு பின்பு கிராமமே மறந்து போச்சு. யாருமே இல்லையே. இப்போ நம் அப்பா அம்மா காலமும் ஆகிவிட்டது. தெய்வம் ஒன்றுதான் சாஸ்வதம்.

உன் அன்புள்ள அக்கா

0 Comments:

Post a Comment

<< Home