Thursday, August 26, 2004

அன்புள்ள தங்கைக்கு,

எனக்கு 10 அல்லது 11 வயது இருக்கும். நம் ஊர் பக்கத்தில் சிவன் கோயில் தெப்போத்ஸ்வம் நடக்கும். தெப்பக்குளம் என்றாலே தண்ணீர் நிரம்பி இருக்கும். அந்த வயதில் அந்த குளமும் நடுவில் நீராழி மண்டபமும் அதேபோல் நகல் எடுத்தாற்பொல் தெப்பமும் அலங்காரத்துடன் நிற்பதைப் பார்த்தால் ஏதோ வேறு லோகத்துக்கு வந்துவிட்டது மாதிரி இருக்கும். நீராழி மண்டபம் மலர்களால் வாழை மரம் மற்றும் அலங்கார விளாக்குகளுடன் பிரமாதமாக பிரகாசித்துக்கொண்டு இருக்கும். தெப்பம் மரக்கட்டைகளால் ஒரு மேடை மாதிரி அலங்கரித்து அதன் மேல் மண்டபம் மாதிரி பூக்களால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். படகு அல்லது பரிசல் ஓட்டுவதுபோல் நாலு பக்கத்திலும் தண்ணீரில் மூங்கில் கழிகளை ஊன்றி தெப்பத்தை நகர்ஹ்துவார்கள். தெப்பம் உள்ளே சுவாமி அலங்கரிக்கப்பட்டு வீற்றிருப்பார்.
நாதஸ்வர வித்வான்கள் அதன் உள்ளே உட்கார்ந்து வாசிப்பார்கள். தெப்பம் நகர ஆரம்பிக்கும்போது ராத்ரி 10 அல்லது 11 மணி ஆகிவிடும். தெப்பம் நகர ஆரம்பித்தவுடன் வாண வேடிக்கை வேட்டு போடுதல் நடக்கும். நீராழி மண்டபத்தை தெப்பம் அனேக தரம் சுற்றி சுற்றி வரும். திருவிழா குடிய விடியற்காலை ஆகிவிடும். மேலே கறு வானத்தில் நட்சத்திரமும் பூமியில் நாதஸ்வர ஓசையும் தெய்வ அலங்காரமும் ஏதோ சொர்க லோகத்தில் சஞ்சரிப்பதுபோல் இருக்கும். 50 வருடங்களுக்கு முன்னால் ஜனங்களுக்கு இதுபோல் திருவிழாக்கள்தாம் உற்சாகமான சமயம். நன்றாக நிதானமாக அனுபவித்து அதைப் பற்றி ஒரு வாரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.
அதுபோல் நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது பசுவின் யாத்திரை என்று ஒரு சிறுமிகள் சம்பந்தபட்ட விழா இருந்தது. அக்கரஹாரத்தில் இருக்கும் 10 வயது பெண் குழந்தைகள் மாலை வேலைகளில் ஒவ்வொரு வீடாக போய் கும்மி கோலாட்டம் ஆடிவிட்டு அந்த வீட்டுக் காரர்கள் கொடுக்கும் பரிசுப் பணத்தை வாங்கி வருவோம். ஒரு வாரம் ஆன பிறகு ஒரு பொது இடத்தில் கோவில் மாதிரி இடத்தில் பசு மாடு வைத்து அலங்காரம் செய்து அதற்கு பூஜை பண்ணி அங்கேயும் ஆட்டம் பாட்டம் என்று எல்லாம் இருக்கும். மொத்தமாக சேர்ந்த பணத்தில்தான் எங்கள் செலவுகள் இருக்கும். பூஜை செலவு போக மீதி இருந்தால் கும்மி கோலாட்டம் ஆடிய பெண்களுக்கு சட்டைத் துணியும் கிடைக்கும். இந்த மாதிரி பூஜையில் எனக்கு ஒரு தரம் சாட்டின் பிளவுஸ் துணி - சிகப்பு கலரில் - கிடைத்தது. அதெல்லாம் அந்த அறியா வயசுலே எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா?
இப்போது அதையெல்லாம் நினைத்துதான் பார்க்க முடியும். எப்படி பண்டிகைகள் ஏதோ ஒரு அவசரத்துடன் நடப்பது போல திருவிழாவையும் மக்கள் மறந்துவிட்டார்கள்.

மற்றவை பின்.

அன்புள்ள அக்கா.

0 Comments:

Post a Comment

<< Home