Tuesday, October 26, 2004

அன்புள்ள தங்கைக்கு,

சில நாட்கள் முன்பு தாத்தா பாட்டி கிராமத்துக்கு போனபோது ஸ்ரீரங்கமும் போனோம். 1955 -56 வருஷங்களில் ஸ்ரீரங்கத்திலேயே நம்ம உறவுக்காரர்களுடன் தங்கி திருச்சியில் படித்துக்கொண்டிருந்தேன் இல்லையா? நானும் அத்தைகளும் சம வயதுக்காரர்கள். அப்போதெல்லாம் கொள்ளிடத்திலும் தண்ணீர் இருக்கும். காவேரியிலும் தண்ணீர் இரு கரையும் புரண்டு ஓடிக்கொண்டிருக்கும். ஸ்ரீரங்கத்தில் கோவில் பக்கத்திலேயே உத்திர வீதியில் வீடு இருந்தது. மாலையில் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் வீட்டு உடையை மாற்றிக்கொண்டு கைகால்களை சுத்தம் செய்துகொண்டுதான் சமையல் அறையில் நுழைய வேண்டும். காபி பலகாரம் ரெடியாக இருக்கும். சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பிவிடுவேன். அந்த மாதிரி ஒரு வருஷம் பகவானை, தாயாரை தரிசிக்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அப்போதெல்லாம் இப்ப மாதிரி தினசரியிலேயே கும்பல் இருக்காது. அதனால் டிக்கெட் வாங்கும் வழக்கமெல்லாம் இருக்கவில்லை. தாயார் சந்நிதியில் நுழைந்து தாயாரை தரிசனம் செய்வேன். பிறகு 5 குழி 3 வாசல் வழியாக பெருமாள் சந்நிதிக்கு போவேன். அதென்ன 5 குழி 3 வாசல் என்கிறாயா?
ஸ்ரீரங்கத்து தாயார் படி தாண்டாத பத்தினி. பெருமாள்தான் தாயாரை சந்திக்க சந்நிதிக்கு வர வேண்டும். பெருமாள் வரப்போகிறார் என்றவுடன் 3 கோபுர வாசல்படியில் மண்டியிட்டு கைகளை தரையில் ஊன்றி எட்டி பார்ப்பாராம் தாயார். அதன் அடையாளமாக கல்லில் ஐந்து விரல் குழிகள் வாசல்படியில் இருக்கும். பெருமாளை சேவித்துவிட்டு கருட மண்டபத்தில் இருக்கும் கடைகளை கண்ணால் பார்த்துவிட்டு தெற்கு வாசல்படி வழியாக வீடு வந்து சேருவேன். ரொம்ப இனிமையான கவலையில்லாத பருவம்.
சின்ன வயதில் பாட்டியின் உறவுக்காரர்கள் வீட்டிற்கு பாட்டி அழைத்து செல்வார். எல்லாமே 13 வயதுக்குள்தான். ராத்திரி இருட்டி போயிருக்கும். எனக்கு சின்ன வயதில் இருட்டு மின்னல் இடி - சண்டையிடும் சத்தங்கள் எல்லாமே பயம்தான். வயது காரணமா அலல்து உடம்பு பலகீனமா என்று தெரியாது. ஸ்ரீரங்கத்து கோவிலுக்கு பக்கத்து தெருவில்தான் உறவுக்காரர் வீடு. கோவில் வாசல் வழியாக போக வேண்டும். கோவில் வாசலில் எப்போதும் யானை கட்டியிருப்பார்கள். இருட்டு வேளையில் யானை கத்துவதை கேட்க எனக்கு பயமாக இருக்கும். பாட்டியின் கையை பிடித்துக்கொள்வேன். பாட்டி சொல்வாள்: " அந்த தகர கொட்டகைக்குள்தான் யானை இருக்கிறது. பயப்படாமல் வா ' என்பார். நானும் தைரியமடைந்து பாட்டியுடன் போவேன். மறுநாள் காலை ஊருக்கு திரும்ப அதே வழியாகதான் போக வேண்டும். அப்போது பார்த்தால் யானை வெளியில்தான் நின்றுகொண்டு இருந்தது. பாட்டி காண்பித்த தகர கொட்டகை தேர் முட்டி. அதாவது கோவில் தேரை கொட்டகையில் உள்ளே வைத்து பூட்டியிருப்பார்கள். பாட்டி எப்படி சாதுர்யமாக சொல்லி என்னை அழைத்து போனார் என்று இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பக்கத்து தெருவில் வீடு என்று சொன்னேன் அல்லவா? அதனால் அந்த தெருவில் எப்போதும் பெருமாள் வீதி உலா வருவார். கோவிலில் பெருமாள் கிளம்பிவிட்டார் என்று தெரிந்ததும் வீட்டிற்கு எதிரில் வாளி வாளியாக தண்ணீர் தெளித்து பெருக்கி சுத்தம் செய்வேன். அவசரமாக புள்ளி வைத்து கோலம் போட காலம் இருக்காது. தகர குழல்கள் கோலம் போட என்று கடையில் விற்பார்கள். அதை எடுத்து கோலமாவு ரொப்பி தெரு அளவுக்கு கோலம் போடுவேன். கோலம் போடும்போது நம்முடைய கற்பனை வளம் நன்றாக வேலை செய்யும். மனம் போன வழியில் கையும் கைபோன வழியில் கண்ணுமாக அழகாக கோலம் அமையும். கோலம் முடியும் சமயம் பெருமாளும் வாசலுக்கு வந்திருப்பார். வீட்டு வாசலில் தீபாராதனை பண்ணுவோம். நான் போட்ட கோலத்தில் பெருமாளும் ஸ்ரீமான் தூக்கிகளும் நிற்பார்கள். அப்போது கிடைக்கும் ஆனந்தம் அளவு இல்லாதது.

உன் அன்புள்ள அக்கா

0 Comments:

Post a Comment

<< Home