Wednesday, August 11, 2004

அன்புள்ள தங்கைக்கு,

எப்படி கதை எழுதுவது என்பது பற்றி நிறையபேர் எழுதிவிட்டார்கள். ஆனால் சுவாரசியமாக கதைப் படிப்போரைக் கவர்ந்து எழுதுவது எப்படி? இது பெரிய கேள்வி. எந்த வயதில் யார் யார் எப்படி எழுதுகிறார்கள் என்பதையே நிறைய கதைகள் சொல்லும். ஒரு எழுத்தாளர் எழுதிகிறார். " பத்திரிகைகளில் கதை போட்டி வந்தபோது நாமும் எழுதிப் பார்க்கலாமே என்று எழுத ஆரம்பித்தேன் என்று. ரிடையரான ஆசிரியர் ஒருவர் எழுதுகிறார் 60 வயதுக்கு ரிடையர் ஆனபோது பொழுதுபோக்காக ஏதாவது எழுதி பார்க்கலாமே என்று எழுத ஆரம்பித்தேன் என்று. இன்னொரு கதாசிரியர் கணவனை இழந்து கஷ்டங்கள் வந்தபோது யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் எழுத ஆரம்பித்தேன் என்று. மேலும் சிலர் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் வீட்டிலிருந்தபடியே எழுத ஆரம்பித்தேன் என்றும் சமீபத்தில் வாலண்டியர் ரிடையர்மெண்ட் எடுத்துக்கொண்டவர்கள் சின்ன வயசிலிருந்து எழுத வேண்டும் என ஆசை இருந்தது. அதான் இப்போ எழுதிக்கொண்டிருக்கிரேன் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
பழைய பாட்டிமார்கள் சொன்ன கதைகளில் நீதியும் இருக்கும். பாடமும் இருக்கும். குழந்தைகள் பேசத்தெரிந்தவுடன் கதை கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சாப்பிடாத தூங்காத குழந்தைகள் கதை கேட்க ஆரம்பித்தவுடன் அந்த சுவாரசியத்தில் சாப்பிட, தூங்க ஆரம்பிக்கிறார்கள். இந்த பழக்கம் பெரியவர்கள் ஆன பிறகும் தொடருகிறது. ஆனால் 50 வருஷத்துக்கு முந்தின கதையெல்லாம் இப்போ அவ்வளவு எடுபடுவதில்லை. மின்சாரம், கம்ப்யூட்டர் போன்ற சமாசாரங்கள் இல்லாத காலத்தில் சொல்லப்பட்ட கதைகள். குழந்தைகள் கூட பழைய கட்டுக் கதைகளை நம்ப அல்லது கேட்க மறுக்கிறார்கள்.
உதாரணத்துக்கு காக்காய், நரி, வடை கதை. அதையே கொஞ்சம் மாற்றி காக்காய் வடையை காலின் கீழே வைத்துக்கொண்டு பிறகு கரைய ஆரம்பித்தது என்று சொன்னால் நம்புகிறார்கள். ராட்சஷன், அசுரன் கதைகளை இந்த காலத்துக்கு ஏரோப்ப்ளேன் ராக்கெட் சம்பந்தபடுத்தி சொன்னால் கேட்க பிரியப்படுகிறார்கள்.
இப்பவும் டீன் ஏஜ் குழந்தைகள் பழைய சமாசாரங்கள் சம்பவங்கள் அடங்கிய கதைகள் என்றால் கேட்கவும் படிக்கவும் பிரியப்படுகிறார்கள். இப்போ மனிதனுக்கு நிறைய சௌகரியங்கள், சாதனங்கள் இருபப்தால் இவை இல்லாத காலத்தில் மனிதர்கள் எப்படியிருந்தார்கள் என்று கேட்க பிரியப்படுகிறார்கள். அதே மாதிரி தன் சம்பந்தப்ட்ட பெரியவர்கள் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தப்பா, என்று பழைய சம்பவங்கள் பற்றி கேட்கவும் தயாராக இருக்கிறார்கள். நம் வீட்டில் இன்றும் கூட காலணா, அரையணா என்று கணக்கு எழுதின நோட்டு புத்தகங்களைப் பத்திரமாக வைத்து இருக்கிறோமே?
எனக்கு இப்போது பழைய டைரி ஒன்றும் புது டைரி ஒன்றும் எழுத வேண்டும் போல் இருக்கிறது. அது என்ன பழைய டைரி என்கிராயா? சின்ன வயசில் என் அனுபங்கள் எழுதிகீரேன் இல்லையா? இவை என் பழைய டைரி. இப்போ என் பேரன் பேத்தி என்று என் வட்டம் பெரிதாக ஆகிவிட்டதல்லவா? இன்றைய என் அனுபவங்கள் புது டைரி.
இப்போ இங்கே இது பழைய டைரி:
பிள்ளையார், திருப்பதி வேங்கடாஜலபதி, குருவாயூரப்பன் இவர்களையெல்லாம் வருஷ வருஷமாக, காலம் காலமாக வணங்குகிற மாதிரி இருக்கிறது. இதற்கு காரணம் சின்ன வயசில் - 5 அல்லது 7 வயது இருகலாம். நம்ம தெருவில் நம் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ஒரு சின்ன பிள்ளையார் கோயில் இருந்தது. காலையும் மாலையும் சின்ன விளக்கு எரிந்து கொண்டிருக்கும். யாரோ ஒரு மனிதர் அபிஷேகம் பண்ணி, பூஜை பண்ணி விளக்கேற்றிவிட்டுப் போவார். அதேபோல் நம் கிராமத்தில் பாட்டி வீட்டில் பெரிய ஹால் இருக்கும். அதில் ஊஞ்சல் போட்டிருக்கும். என் வயது உறவுக்கார பெண்கள் - பாவாடை சட்டை போட்ட வயது - ஊஞ்சலில் உட்கார்ந்து வேக வேகமாக ஆடிக்கொண்டிருப்போம். ஊஞ்சலுக்கு நேரே சுவற்றில் பழைய திருப்பதி பெருமாள் படமும், குருவாயூரப்பன் படமும் மாட்டியிருக்கும். அந்தப் படங்களைப் பார்த்துக்கொண்டே ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்போம். கண்ணால் பார்த்து, பார்த்து, அந்த தெய்வங்கள் இப்போதும் சினேகிதர்கள் மாதிரியும் அதற்கு மேலேயுமாக இருக்கிறார்கள். தெய்வங்களிடம்தான் மனது விட்டு பேச முடிகிறது. மனிதர்களிடம் பேசினால் ஆமா பெரிதாக பேச வந்துவிட்டாள் எல்லாம் தெரிந்த மாதிரி என்று நம்மளைப் பேசி விடுவார்களோ என்று தோன்றும்.
இப்போ புது டைரி: இப்படி மனசுக்குள் இந்தத் தெய்வங்கள் நாற்காலி போட்டு அமர்ந்து விட்டார்களா? எனக்கும் இந்தக் கோவில்கள் போவது பிடிக்கும் என்று உனக்குத் தெரியுமே? சென்ற வருடம் தொடர்ந்து சில மாதங்கள் எனக்கு அதிர்ஷடம்தான். கொஞ்ச நாள் முன்பு யாரோ எங்கேயே எழுதியிருந்தார்கள். 30 வருடங்கள் வடக்கேயிருந்திருந்தாலும் பத்ரினாத், வைஷ்ணவி தேவி கேதர நாத் போன்ற இடங்களுக்குப் போக முடியவில்லை; ஆனால் இப்போ ரெண்டாவது பிள்ளைக்கு லீவு கிடைத்ததும் அக்டோபர் மாதம் குளிராக இருக்கும் என்று தெரிந்தும் தெய்வ தரிசனங்கள் போய் வந்தேன் என்று எழுதியிருந்தார்.
20 வருஷமாக டில்லியில் பெண் வீட்டிற்கு போய் வருகிறேன். இதுவரை மதுரா ஆக்ரா நைனிடால் போன்ற எந்த இடங்களுக்கும் போனதில்லை. ஆனால் சென்ற வருடம் ஆகச்ட் மாதம் ஹரித்வார், ரிஷி கேஷ் போன்ற ஸ்தலங்களுக்கு பெண் மாப்பிள்ளை பேரன்கள் இவர்களுடன் போய்விட்டு வந்தே. இது எதிர்பாராது கிடைத்த சந்தர்ப்பம். அதுவும் வரலட்சுமி விரதத்தின் தினம் மானஸாதேவி தரிசனம். புரட்டாசி சனிக்கிழமை ஹரித்ஹ¤வாரில் கங்கை ஸ்னானம், மாலை தீபாராதனை என்று ஒரே அதிர்ஷ்ட மழைதான் போ.
ரொம்ப நாளாக குருவாயூரப்பன் தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆசை. 2 முறை போய் வந்திருந்தாலும் நிதானமாக தரிசனம் செய்ய முடியவில்லை. கும்பலில் தவித்து கிடைத்த சந்தர்ப்பத்தில் நானும் இவரும் தரிசித்துவிட்டு வந்திருந்தோம். அதேபோல் சென்ற வருடம் நீ எர்ணாகுளத்துக்கு ஏதோ வேலையாக வருவாதாயும், நாங்களும் வந்தால் எல்லோரும் சேர்ந்து குருவாயூர் போகலாம் என்று திட்டம் போட்டாய். இப்படியாக காலை மாலையும் குருவாயூரப்பன் தரிசனமும் நன்றாக கிடைத்தது.
அப்புறம் சின்னவன் பிள்ளைக்குத் திருப்பதியில் மொட்டையடித்து காது குத்தும் சந்தர்ப்பம் வந்தது. அதுவும் மனசுக்குத் திருப்தியாக ஆச்சு.
அடுத்து உடனேயே நாத்தனாரும், கணவரும் ஹைதராபாதிலிருந்து வந்தார்கள். அவர்கள் மைசூர் மேல்க்கோட்டை நாராயாணனைத் தரிக்க வேண்டும் என்று கிளம்பினார்கள். அவர்களுடன் தொற்றிக் கொண்டதில் அந்தக் கோவிலும் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்புறம் மறுபடி டில்லி சென்ற போது ஏதோ வேலையாக ஆர். கே. புரம் போனபோது மாப்பிள்ளை எங்களை அங்கேயிருந்த வெங்கடாஜலபதி கோவிலுக்கு அழைத்துப்போனார். ரொம்ப வருஷமாக அந்தக் கோவில் ஆர்.கே புரத்தில் இருப்பதாக கேள்விப்பட்டிருந்தாலும் நான் இதுவரை அங்கு சென்றதில்லை. இப்போது அவரே நம்மை அழைப்பது மாதிரியிருந்தது. நன்றாக நவராத்திரி சமயம் தரிசனம் கிடைத்தது.
இரு இரு. என் கோவில் தரிசனம் அதிர்ஷ்டம் இன்னும் தொடருகிறது. எல்லாம் கிட்டதட்ட ஒரே சமயம்.
அடுத்து என் சினேகிதி அம்ருதாவை உனக்குத் தெரியுமில்லையா? 42 வருஷங்களாகப் பழக்கம். எனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரி உணர்வுகள். அதனால்தானே என்னவோ இவ்வளவு வருஷமாக சினேகிதிகளாக இருக்கிறோம்.
அவள் ஒரு நாள் 'இங்கே பக்கத்தில் ஒரு குருவாயூர் கோவில் போல இருக்கிறது; சாந்தமான சூழ்நிலை என்றாள். எனக்கும் அங்கே ரொம்ப நாளாக போக வேண்டும் என்று ஆசை. ஆனால் முடியவில்லை. திடீரென்று அவள் போன் பண்ணி இப்போ கிளம்பு; மகளை அழைத்துக் கொண்டு அவள் காரைக் கொண்டு வருகிறேன் என்றாள்.
அப்படியாக அவள், அவளுடைய மகள் கூட 25 கி.மி. பயணம் செய்து அந்தக் கோவிலை அடைந்தோம். மனதில் என்ன ஒரு சந்தோஷம்; என்ன ஒரு நிம்மதி தெரியுமா? என் சினேகிதிக்கு நாராயணீயம் மனப்பாடம். அவள் அங்கே சில தசகங்களைப் பாடினாள். நான் திருப்பாவை பாடல்கள் பாடினேன். ரொம்ப வருஷமாக பாடுவதையே விட்டுவிட்டேன். எல்லாம் மறந்து போனது. அப்போ அவள் மாலே மணி வண்ணா என்ற திருப்பாவைப் பாடலைப் பாடச் சொந்னாள். குருவாயூரப்பனே பாடச் சொன்னமாதிரி இருந்தது. பாடினேன். எனக்கு அன்று கிடைத்த சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. பாலும் பழமும் கிடைத்து வாயில் வந்து விழுந்த மாதிரி இருந்தது.
பகவான் கிருபை இருந்தால் எல்லாம் தானே சரியாக நடக்கும்.

மற்றவை பின்.

அன்புள்ள அக்கா.


0 Comments:

Post a Comment

<< Home