Tuesday, July 06, 2004

அன்புள்ள தங்கைக்கு,

பெண்கள் தனியாக பிரயாணம் செய்வது என்பது இப்போல்லாம் ரொம்ப சர்வ சகஜம் இல்லையா? வெளி தேசங்கள், வெளியூர் என்று எல்லா இடத்துக்கும் போய் வருகிறார்கள். ஆனால் இந்த காலத்திலும் தனியாகவா போய் வந்தீர்கள் என்று ஆச்சரியமாக கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
ஒரு சமயம் 1 வாரம் டெல்லிக்கு போய் வந்தேன். எங்கள் தெருவில் இருக்கும் பெண்மணி, எங்கே கொஞ்ச நாட்களாய் கண்ணில் படவேயில்லை என்று விசாரித்தாள். நான் டில்லி போய் வந்த விஷ்யத்தைச் சொன்னேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். என்னங்க இது? மார்கெட் போய் வந்தேன் என்பதுபோல் சொல்கிறீர்கள்? தனியாக உங்களால் எப்படி போக முடிந்தது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். அதற்கு நான் சொன்ன பதில் - எதுவுமே பழக்கம்தான் காரணம்.

யாரையும் எதிர்பார்க்காமல் - கல்யாணம் மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களில் எங்கு வேண்டுமானாலும் தனியாக போய் வர பழகிவிட்டது என்று அந்தப் பெண்மணியிடம் பதில் சொன்னேன். ஏனென்றால், சின்ன வயதில் 15 வயது முதலே அப்பா அம்மா நம்மை ஹாஸ்டலில் விட்டு பழக்கி விட்டார்கள். நம் ஊரில் பள்ளியிறுதியும் காலேஜும் கிடையாதே? கல்யாணம் ஆன பிறகும் கணவருக்கு லீவு கிடைக்காது. அதனால் அவரும் என்னையும் குழந்தைகளையும் தனியாக பிரயாணம் செய்ய்யச் சொல்லிவிடுவார்.

எதுவுமே பழக்கம்தான் காரணம் என்பது சரிதானே? சமையல் என்று எடுத்துக் கொண்டால் முதலில் எது செய்ய வேண்டும், அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று முதலில் தடுமாறினாலும் பின்னர் பழக்கத்தில் வந்துவிடுகிறது இல்லையா? அவசியம் என்றால் எல்லோரும் எதையும் கற்றுகொல்ள முடியும்.

பாஷைகளைக் கற்றுகொள்வதும் இப்படிதான். ஹிந்தி பரிட்சைகளைப் பொழுதுபோக்காக பள்ளி நாட்களில் கற்றுகொள்ள ஆரம்பித்தேன். ஆனால் கல்யாணம் ஆகி வட நாட்டில் குடித்தனம் பண்ண போவேன் என்று தெரியாது. அப்போது இந்த ஹிந்தி கற்றுகொண்டது சௌகரியாமாக இருந்தது. அங்கே பக்கத்து வீட்டில் கன்னடம் பேசுபவர்கள் நண்பர்கள். அவர்கள் வீட்டுக் குழந்தையுடன் கன்னடம் ஹிந்தி மூலம் கன்னடம் கற்றுக் கொண்டேன். பின்னால் இங்கே பெங்களூர் மாற்றலாகி வந்தபோது எளிதாக கன்னடம் பேச முடிந்தது. இதைத்தான் செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்வார்கள்.

மற்றவை பின்.

அன்புள்ள அக்கா.

0 Comments:

Post a Comment

<< Home