Tuesday, February 01, 2005

அன்புள்ள தங்கைக்கு,

ரயில் பிரயாணமும் நானும் - அல்லது ரயில் பிரயாணங்களில் நான் - என்று யோசித்து பார்க்கிறேன்.

நான் சின்னவளாக 6 அல்லது 7 வயதாக - இருந்தபோது எனக்கு ரயில் பயணம் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் அப்பா பெரும்பாலும் பஸ்ஸில்தான் அழைத்துப் போவார். ஒரு வேளை நாம் போகும் ஊருக்கெல்லாம் அப்போது ரயில் இல்லையாயிருக்கும்; அல்லது பஸ் எளிதாக / நிறைய இருந்திருக்கும். இல்லையென்றால் பஸ்ஸில் பயண நேரம் குறைவாக இருந்திருக்கலாம். அப்பாவுடன் பஸ் பயணம் என்றால் எனக்கு ஒரே பயம். காரணம் கண்டக்டரிடம் அல்லது சரியாக நடந்து கொள்ளாத சக பிரயாணியுடனோ ஏதாவது வாக்குவாதம் வந்துவிடும். எனக்கு சின்ன வயதில் யாராவது கத்தி பேசினால் பிடிக்காது. நான் ஒரு சாதுவான பெண். ஆனால் ரயில் பயணத்தில் இந்த தொந்தரவெல்லாம் கிடையாது. இடம் தாராளமாக இருக்கும்.அதுவும் அப்போதெல்லாம் ரயிலில் மூன்று வகுப்புகள் இருந்தன. முதல் வகுப்பில் சாய்ந்துகொள்ள, உட்கார்ந்து கொள்ள எல்லாமே மெத்தை தைத்ததாக இருக்கும் ( இப்போதான் எல்லா வகுப்புகளிலுமே இருக்கே). முதல் வகுப்பில் நான்கு பேர்தான் இருக்கலாம். இரண்டாம் வகுப்பில் உட்கார மாத்திரம் மெத்தை. சாயும் இடத்தில் மரம்தான். இதில் 6 பேர் பயணம் செய்யலாம். மூன்றாம் வகுப்பில் எல்லாமே மரம்தான். ஒரு சீட்டில் நான்கு பேர் நெருக்கியடித்து உட்காரணும். கும்பலாக இருந்தால் இன்னும் நிறைய பேர் நெருக்குவார்கள். அப்பா 40 மைல் பயணத்துக்கு இண்டர் வகுப்பில் அழைத்துச் செல்வார்.

திருச்சி ஜங்ஷனில் ஐஸ்கிரீம் கடை இருக்கும். போனவுடன் ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் அப்பா ஐஸ் fruit salad வாங்கி தருவார். ஒரு பெரிய கண்ணாடிக் கோப்பையில் விதம் விதமாக பழங்கள் போட்டு ஐச்கிரீமும் சேர்த்து சாப்பிடுவது அந்த வயதில் எனக்கு மகா சுகமான அனுபவம். அதன் விலை 4 அணாதான். அப்பாவின் கண்டிஷன் பிரகாரம் அவர்களாக எது கொடுத்தாலும் சாப்பிடணும். எனக்கு வேணும் என்று கேட்க கூடாது. ஆனால் பிரயாணத்தின்போது அப்பா ரொம்ப அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருப்பார். இன்னொரு ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயா என்று கேட்டு நான் தலையாட்டியவுடன் இன்னொரு கப் வாங்கித் தருவார். எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமோ :-)ஒரு வேளை இதற்காகவே நான் ரயில் பயணத்தை விரும்பினேன் என்று நினைக்கிறேன்.

இதை ஞாபகம் வைத்துக்கொண்டுதான் பின்னர் நான் பெரியவளாகி புக்ககம் போன பின்னர் தம்பியும் நீயும் என்னை ஸ்டேஷனுக்கு வழியனுப்ப வரும்போது ஐஸ்கிரீம் வாங்கும் வழக்கம் இப்படிதான் வந்தது. நீ என்னைவிட 11 வயது சின்னவள்; அவன் 8 வயது சின்னவன். அப்பா மாதிரி நானும் உங்களை இன்னும் ஐஸ்கிரீம் வேண்டுமா என்பேன்; உங்களுக்கு ஒரே சந்தோஷமாக இருக்கும். எல்லோரும் சேர்ந்து அனுபவிப்பது இன்னும் சந்தோஷம். முதல் சம்பவத்துக்கும் இரண்டாம் சம்பவத்துக்கும் 17 வருஷம் இடைவெளி. ஆனாலும் சந்தோஷங்கள் ஒன்றுதானே?

எனக்கு இன்னொரு காரணத்தினால் ரயில் பயணம் பிடிக்கும். நம் பெரியம்மா பையன் என்னைவிட ஒரு வயது பெரியவன். கோடை விடுமுறையில் சென்னையிலிருந்து கிராமத்துக்கு குடும்பத்தோடு வருவார்கள் - தாத்தா பாட்டியைப் பார்க்க. பெரியப்பா ரயில்வேயில் இருந்தார். இவன் இருக்கானே, அவன் ரயில் வந்ததைப் பெரிய கதையாக சொல்வான். மெத்தை தைத்த வண்டியில் வந்தோமாக்கும்; நாங்க மட்டும்தான் அந்த பெட்டியில். நன்றாக படுத்து தூங்கிக் கொண்டு வந்தோமாக்கும்" என்பான். பெரியம்மாவும் அப்போ அந்தக் காலப்படி மடிசார் புடவை உடுத்தி ரொம்ப கம்பீரமாக இருப்பார். வைரத் தோடு, மூக்கு பொட்டு, கழுத்தில் சிவப்பு கல் அட்டிகை, இடுப்பில் ஒட்டியாணம், கை நிறைய வளையல்கள், கையில் வெள்ளிக் கூஜா, என்று அவர் வண்டியைவிட்டு இறங்கி வரும்போது எனக்கு அவரை பெரிய வி ஐ பி என்றுதான் தோன்றும். நாமும் இந்த மாதிரி ரயிலில் சௌகரியமாக பிரயாணம் செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.

இதற்குப் பிறகும் பஸ்ஸில்தான் பிரயாணம் அதிகம் இருந்தது. எனக்கு கல்யாணம் ஆனது. அத்திம்பேருக்கும் ரயில்வேயில் வேலை இல்லையா? முதன் முதலில் சென்னைக்கு குடித்தனம் போகும்போது ரயிலில்தான் பயணம். பின்னர் எனக்கும் ரயில் பழகிப் போச்சு. அவருக்கு வடக்கே மாற்றல் ஆனது. பின்னர் முதல் வகுப்பு பயணங்களும் பழகிப் போச்சு.

ஆனால் அந்த நாட்களில் வாரணாசி போவதற்கு 48 அல்லது 56 மணி நேரம் பயணம். முதன் முதலில் இவ்வளவு நேரம் ரய்லிலேயே என்று சந்தோஷமாக இருந்தது. ஆனால் குழந்தைகள் பிறந்து அவர்களுக்காக இரண்டு நாட்கள் வேண்டிய சாப்பாடு, - பல் இல்லாத மாமியாருக்காக தனியாக ரவை உருண்டை, மெல்லிய ஓமப்பொடி - உடையில் பட்டன் அறுந்தால் தைக்க ஊசி நூல், வண்டியில் விளக்கணைந்துவிட்டால், ( இடார்ஸியில் பெட்டிகளை வேறு இஞ்சினில் கோர்க்கும் வரையில் நம் பெட்டியில் விளக்கு இருக்காது - உபயோகத்திற்கு தீப்பெட்டி, மற்றும் உப்பு, சர்க்கரை ஊறுகாய் என்று மூட்டை கட்டி - ஒரு சமயத்தில் பிரயாணமே வேண்டாம் என்று இருந்தது !
ஆனால் என் பெண் சொல்வதுபோல் ரயில் மற்ற வீட்டு வேலைகள் குறைவு. காய்கறி வாங்க வேண்டாம்; என்ன சமையல் என்று திட்டம் போட வேண்டாம்; முக்கியமாக சமையலறை சுத்தம் செய்கிற வேலையெல்லாம் கிடையாது :-)
இதெல்லாம் அந்தக் காலம். இப்போ காரியர் சாப்பாட்டுக்கு பதில் பிளாஸ்டிக் டப்பாக்களில் சாப்பாடு வருகிறது. வெள்ளிகூஜா...? கூஜா பழக்கமே போய்விட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள்தாம் தன்ணீர். அதுவும் கடைகளில் விற்கும் பாட்டில்கள்.

இப்போதும் டில்லியில் பெண் வீட்டிற்கு ரயிலில்தான் பயணம். அலுமினிய பேப்பரில் சாப்பாடும், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீருமாக போகிறோம். 2000 கிலோ மீட்டர் இன்று 36 அல்லது 34 மணி நேரத்தில் கடந்து விடுகிறோம். பல வருஷமாக ரயிலில் போய் வந்தாலும் மலைகளையும் ஆறுகளையும் இயற்கை காட்சிகளையும் ஜன்னல் வழியாகப் பார்த்து ரசிப்பது அலுக்காத ஒன்றாகதான் இருக்கிரது. சின்ன வயசில் மலைகளும் மரங்களும் மேகங்களும் ஓடுவது போல் தோன்றும். இன்று பகவானுடைய சிருஷ்டியை நினைத்து மலைப்பாக இருக்கிறது.

மற்றவை பின்.

உன் அன்புள்ள
அக்கா.

பி.கு:கடிதம் எழுதி மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது இல்லை? ஏதேதோ சின்ன சின்ன வேலைகள். குடும்பம் என்றால் அப்படித்தானே ? :-) இனிமேல் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது கடிதம் எழுத நிச்சயம் முயல்கிறேன் :-)

உன் அன்பு சகோதரி.