Tuesday, June 01, 2004

ஏதடா, நிறைய கதை சொல்ல ஆரம்பிப்பது போல் தொடங்கினாளே, அதற்குள் காணாமல் போய்விட்டேன் என்று பார்த்தீர்களா? எனக்கு கணினியில் ஒன்றும் தெரியாது. ஆனால் நான் சொல்லும் விஷய்ங்கள் சுவாரசியாமாக இருப்பதாக சொல்லி என் தங்கைதான் இப்படி ஒரு பதிவு எனக்காக தொடங்கி வைத்தாள். நான் இருப்பது பெங்களூரில்; அவள் இருப்பது சென்னையில். அவ்வப்போது நான் சென்னை வரும்போது நான் எழுதிக்கொடுத்தவற்றை அவள் இங்கே போடுகிறாள். நீங்கள் பின்னூட்டம் விடுவதை அவள் எனக்குப் படித்துச் சொல்ல, நான் அதற்கு போனிலேயே பதில் சொல்ல, அதை அவள் இங்கு பதிய, ஒரு தொலைதூர பதிவாக இது இருக்கு. அதுதான் பதிவுகளுக்குள்ளே இடைவெளி. மன்னிக்கவும். இனிமேல், கடிதமாக எழுதி அவளுக்கு அனுப்பலாமா என்று யோசிக்கிறேன்.

இந்த பதிவுக்காக நான் எழுதிக் கொடுத்தது:

கரியில் ஓடுகிற பஸ் பற்றி எழுதியிருந்தேன் இல்லையா? அந்த பஸ்ஸில் எரிந்த கரி சாம்பலை சுத்தம் செய்யும் பையன் நினைவுக்கு வருகிறான். அவன் வேலை, பழைய சாம்பலை எடுத்து சுத்தம் செய்து, புது கரியைப் போட்டு தணலை உண்டாக்குவது. பிறகு காற்று விசிறி என்று ஒரு மெஷின் இருக்கும் - வீட்டில் காப்பிக்கொட்டை அரைக்க என்று ஒரு மெஷின் பாட்டி காலத்தில் இருக்குமே ஞாபகம் இருக்கா? - அதுபோல இருக்கும் இந்த மெஷின். அந்த மெஷினை சுழற்றி தணலுக்கு காற்று செலுத்துவான். இந்த வேலையைத் தவிர அவன் வேலை, பயணிகளின் சாமான்களை பஸ்ஸின் மேல் உள்ள கேரியரில் பஸ்ஸின் ஏணி வழியாக ஏறி கொண்டு போய் அடுக்குவது. அதற்கு அவனுக்கு காலணா, அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். இதை தவிர பயணிகளைக் கூவி அழைத்து பஸ்ஸில் அமர வைப்பவனும் அவனே. ராத்திரி 8 மணிக்கு மேல் பஸ் இருக்காது. 25 மைல் பயணத்துக்கு பகலில் எட்டணா சார்ஜ். ஆனால் ராத்த்ரி கடைச் பஸ் என்பதால் ஆள் பிடிப்பதற்காக, "திருச்சி நாலணா", திருச்சி நாலணா" என்று கூவி ஆள் சேர்ப்பான். அவனுடைய யூனிபார்ம் கரி படிந்த ஷர்ட்டும் கரி படிந்த பேண்டும்தான்.

0 Comments:

Post a Comment

<< Home