Tuesday, June 15, 2004

அன்புள்ள தங்கைக்கு,

நானும் அம்மாவும் சின்ன வயதில் விளையாடி இருக்கிறோம். உனக்கு ஆச்சரியமாக இருக்கிறது இல்லை? எனக்கும் அம்மாவுக்கும் 15 வயதுதானோ என்னவோ வித்தியாசம். அதனால் நான் ஒரு பொம்மை மாதிரி அம்மாவுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தையாக இருந்தபோது அழகாகவும் இருந்திருக்கிறேன்.

( இதைத் தட்டச்சு செய்யும் தங்கையின் பி.கு: இப்ப மட்டும் குறைச்சலா என்ன? 63 வயது என்று சத்தியம் செய்யணும் :-) )

அந்தக் காலத்தில் குழந்தை என்றால் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அம்மாவும் கண்டிப்பும் கறாராகவும்தான் வளர்த்தார்கள். களி மண்ணில் சின்னதாக கொடி அடுப்பு போட்டுத் தருவாள் அம்மா. கொடி அடுப்பு என்றால் ஒரு பக்கம் விறகு வைத்து எரிக்க வழி விட்டிருப்பார்கள். இன்னொரு பக்கம் மூடி இருக்கும். ஆனால் மேலே வட்டமாக திறந்திருக்கும். அதாவது எரிகிற பாகத்தில் அதிக தீயும் வட்டமான பாகத்தில் மிதமான தீயும் இருக்கும்.

( தங்கை: நம்ம காஸ் ஸ்டவ் மாதிரி - ஒரு பெரிய அடுப்பு; இன்னொரு சின்ன பர்னர் - அது விறகு ஸ்டைல்; சரியா?)

சட்டி பானை கடையில் சின்னதாக பானை வாங்கி வருவாள் அம்மா. அந்தச் சின்ன அடுப்பில் சுள்ளி, சுள்ளியாக உள்ளே வைத்து அடுப்பை எரிய விட்டு, பானையை அதன் மேல் வைத்து தண்ணீர் விட்டுக் கொதிக்கும்போது டேபிள் ஸ்பூன் அரிசியை அதில் போடுவாள். அரிசி பதமாக வெந்ததும் துளி வெல்லம் போட்டு, நெய் சேர்த்து பொங்கல் ரெடியாகிவிடும். மொத்தமே ஒரு குழி கரண்டி பொங்கல்தான் இருக்கும். இதை எனக்கு விளையாட்டு காட்டுகிறேன் என்று தானே விளையாடி இருப்பாள் என்று நினைக்கிறேன். அம்மாவுக்கு 12 வயதில் கல்யாணம் என்றால் நான் பிறக்கும்போது 16 வயது.

எனக்கு 10 வயது ஆன பிறகு கல்லாங்கா விளையாடுவது பழக்கமாயிற்று. 5 அல்லது 7 கூழாங்கல் வைத்து ஒரு கல்லை மேலே போட்டு அது கீழே வருவதற்குள் இன்னொரு கல்லைக் கையில் கொத்திக் கொண்டு பின்னர் அதே கையால் மேலேயிருந்து வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். பிடித்தால் பாயிண்ட்ஸ். இல்லையென்றால் அவுட். அடுத்து மற்றவர் விளையாட வேண்டும்.

( தங்கை: ஓ, நினைவிருக்கிறதே.... நான் சின்னவளாக இருந்தபோது அம்மா நாங்கள் - நானும் தோழியும் - விளையாடும்போதும் கூட வருவாள்.)

இன்னொரு விளையாட்டு புளியங்கொட்டை கொத்தி விளையாடுவது. பழைய நாளில் புளியை வருஷாந்திரத்துக்கு வாங்கி ஸ்டோர் பண்ணுவார்கள். புளி மேலே ஓடும் உள்ளே கொட்டையும் இருக்கும். ஓட்டை உடைத்து குழவி அல்லது சுத்தியால் புளியை தட்டி கொட்டையை எடுக்க வேண்டும். ஒரு கூடை புளியங்கொட்டை சேர்ந்துவிடும். 4 அல்லது 5 பேர் விளையாட உட்காருவோம்.

( தங்கை: இந்த புளியங்கொட்டை விளையாட்டு என் பள்ளி நாள் வரை கூட வந்தது என்று நினைக்கிறேன். அம்மா புளி வாங்கியவுடன் உட்கார்ந்து இந்த புளியங்கொட்டை "சொத்து" சேர்க்க ஆரம்பித்து விடுவேன். நீ அப்போது திருமணம் ஆகி சென்று விட்டாய். இந்தப் புளியங்கொட்டை சொத்து, பல்லாங்குழி விளையாடுவதற்கு!! )

இந்த புளியங்கொட்டை விளையாடுவதும் கல் மாதிரிதான். ஒரு கொட்டை மேலே போட்டு, அது கீழே வருவதற்குள் கையில் கொள்ளும் அளவுக்கு கொட்டைகளை அள்ளிக் கொண்டு மேலேயிருந்து வரும் கொட்டையையும் பிடிக்க வேண்டும். இந்த மாதிரி சேர்ந்தவைகளை கூண்டாக கூறு கட்டி வைத்துக் கொள்ளணும். யார் ஜாஸ்தி கூறு கட்டியுள்ளார்களோ அவர்களே ஜெயித்தவர்கள். சில சமயம் மரப்பாச்சி பொம்மைக்கு அலங்காரம் பண்ணி சின்னதாக தும்பை பூவில் முறுக்கு மாதிரி பண்ணி பழங்கள் வைத்து அதற்கு கல்யாணம் செய்தும் விளையாடி இருக்கிறோம். அம்மாவே சின்னவள் என்பதால் என்னுடன் தோழி போல் இப்படி விளையாடத் தோன்றியிருக்கும். நீ பிறக்கும்போது அம்மாவுக்கு 27 வயது. அதனால் உன்னை குழந்தையாகவே பாவித்திருப்பாள்.

சரி; மற்றவை பின்.

அன்புள்ள அக்கா.

0 Comments:

Post a Comment

<< Home