Wednesday, June 23, 2004

அன்புள்ள தங்கைக்கு,

பாட்டும் நானே; தாளமும் நானே என்று திருவிளையாடல் படத்தில் டி.எம் சௌந்தராஜன் சிவாஜிக்காக ஒரு பாட்டுப் பாடுவார். அதுபோல்
பாட்டு கற்றுக் கொள்வது என்பதை எவ்வளவு மாதிரியாக நான் முயற்சி செய்திருக்கிறேன் அல்லது எனக்காக முயற்சி செய்யப்பட்டுள்ளது !! எனக்கு 10 வயது இருக்கும்போது அப்பா அம்மா இருந்த ஊரில் எனக்குப் பாட்டு வாத்யார் ஏற்பாடு பண்ணினார்கள். அந்த ஊர் நகரமும் இல்லை; கிராமமும் இல்லை. தாலுகா ஆபீஸ் இருந்த ஊர். பாட்டு வாத்யார் ஒரு வயலின் வித்வான். வயது 60க்கு மேல் ஆகியிருந்தது. காலை வேளையில் ஏழரை மணிக்கு வந்துவிடுவார். சரளி வரிசை - ஜண்டை வரிசை என்று சொல்லிகொடுக்க ஆரம்பித்தார். இவர் சொல்லிக் கொடுத்ததை மறு நாள் காலை நாலரை மணிக்கு எழுட்ந்து சாதகம் பண்ண வேண்டும். விடியற்காலை எழுப்பி விட்டுவிடுவார்கள். தூக்கம் கலைந்திருக்காது. வாயை தண்ணீரில் கொப்பளைத்துவிட்டு பாட ஆரம்பிக்க வேண்டும். விடியற்காலை என்பதால் மற்றவர்களுக்கு தொந்ததர்வு ஆக்க் கூடாது என்பதால் கதவுகளை மூடிவிட்டுப் பாட வேண்டும். ஆனால் 10 நிமிஷ இடைவெளியில், என்ன குரலே கேட்கவில்லை ? வாயைவிட்டு உரக்க பாடு என்பார்கள். ஏதோ என்னால் முடிந்தவரை பாடி சாதகம் பண்ணுவேன். வாத்யார் கீதம் சொல்லிகொடுக்க ஆரம்பித்தார். பாட்டு நோட்டில் ஸ்வரங்கள் எழுதிவிட்டு மறு நாளிலிருந்து சாதகம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். 1 வாரம் கழித்து பிறகு வரவேயில்லை. பிறகுதான் தெரிந்தது அவர் கடவுளின் திருவடையைப் போய் சேர்ந்துவிட்டார் என்று! பாட்டுக் கற்றுகொள்வது நின்றது. எனக்கு விடியற்காலம் எழுந்து கஷ்டப்படவேண்டாமே என்று சந்தோஷம்.

ஆனால் அம்மாவுக்கு என் பாட்டு நின்று போனது பிடிக்கவில்லை. பெண் பார்க்க வரும்போது பாட்டு பாட தெரிய வேண்டுமே? அம்மாவே எனக்கு சில பாட்டுக்களை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். 2 வது பார்ம் அதாவது, 7 வது வகுப்பு படிக்கும்போது எங்கள் ஸ்கூலில் பாட்டு பீரியட் ஒன்று ஆரம்பித்தார்கள். நல்ல தமிழ் பாடல்கள் சொல்லிக் கொடுப்பார்கள். ஒரு நாள் என் பாட்டு நோட்டை வாத்யார் கேட்டார். வாத்யார் என்றாலே ஒரே பயம். அதிலும் என் பாட்டு நோட்டைக் கேட்டு வாங்கி அதில் ஆங்கிலத்தில் ஏதோ டாக்டர் சீட்டு போல வேகமாக கிறுக்கிக் கொடுத்தார். நோட்டை அப்பாவிடம் காண்பிக்க சொன்னார். "சரி. நாம் ஏதோ தப்பு பண்ணியிருக்கிறோம். அதான் அப்பாவுக்கு எழுதியனுப்பியிருக்கிறார்" என்று பயந்து கொண்டே வந்தேன். நான் அப்போ படித்தது தமிழ் மீடியம். ஆங்கிலமே புரியாது. அப்பாவிடம் நோட்டை நீட்டினேன். அதைப் படித்துவிட்டு அப்பா சிரிக்க ஆரம்பித்துவிட்டார். பிறகு சொன்னார் - உன் குரல் வளம் நன்றாக இருக்கு. பாட்டுக் கற்றுகொடுங்கள் என்று எழுதியுள்ளார்" என்றார் அப்பா! மறுபடி நிம்மதியாக பெருமூச்சு விட்டேன்.

ஆனால் வாத்யார் என்னைவிடவில்லை. பாட்டு போட்டியில் கலந்து கொள்ள சொன்னார். அம்மா சொல்லிக் கொடுத்த பாட்டைப் பாடச் சொன்னார். முதன் முதல் அனுபவம் என்பதால் போட்டி வேளையில் மேடையில் போய் நின்றதும் ஒரே நடுக்கம். 200 - 300 தலைகளைப் பார்த்தவுடன் பாட்டு மறந்து போய்விட்டது. வியர்வை வெல்ளம். அழாமல் இருந்தால் போதும் என்று உடனே மேடையை விட்டு உள்ளே ஓடிப்போய்விட்டேன். மறுபடி ஒரு சந்தர்ப்பம் ஓடிப்போயிற்று.

4 வது பாரம் படிக்கும்போது - அதாவது 8 ம் வகுப்பு - மறுபடி பாட்டு போட்டியில் பங்கு எடுத்துக்கொண்டேன். நம்புகிறாயா? எனக்கு 2வது பரிசு கிடைத்தது. அப்பாவுக்கு அடுத்த ஊர் மாற்றலாகும்போது அங்கே பள்ளி இல்லையென்பதால் என்னை டவுனில் ஒரு பெண்கள் பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்தார்கள். அங்கே ஸ்கூல் பிரார்த்தனையில் பாடும் பெண் ஒரு நாள் வரவில்லை. Sister என்னைக் கூப்பிட்டு ஏதாவது தமிழ் பாட்டு பாடு என்றார். இப்போ பாடுகிற தைரியம் நிறையவே இருந்தது. பாடினேன். கொஞ்ச நாட்கள் கழித்து யாரோ அரசியல் தலைவர் ஒருவர் பெரிய ஹாலில் வருகிறார் என்று எங்களையெல்லாம் அங்கே அழைத்துப் போனர்கள். அங்கேயும் பாடவேண்டிய பெண் வர நேரமாயிற்று. Sister என்னைக் கூப்பிட்டுப் பாடச் சொன்னார். இந்த தரம் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் சினேகிதிகளெல்லாம் மிகவும் பாராட்டினார்கள்.

ஸ்கூல் படிப்பு முடிந்து வீட்டில் இருக்கும்போது அம்மா மறுபடி எனக்கு பாட்டு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். நானும் ரேடியோவில் கேட்டு பாட்டுக்களைக் கற்றுகொள்ள ஆரம்பிதேன். பின், கல்யாணம் ஆயிற்று. கல்யாணத்தின்போது என்னைப் பாடச் சொன்னார்கள். அம்மா சொல்லிகொடுத்ததைப் பாடினேன். உறவுக்காரார்கள், கணவன் வீட்டினர் குரல் நன்றாக இருக்கிரது- சரியாக கற்றுகொண்டுவிடு என்றார்கள். ஹ்ஹ¤ம். அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.

நான் குடித்தனம் போன ஊரில் அக்கம்பக்கம் பூஜையில் கூப்பிடுவார்கள். அப்போ என்னைப் பாடச் சொல்வார்கள். இப்படி என் பாட்டு போய்கொண்டிருந்தது. ஆனால் இப்போ வரைக்கும் ராகமும் தெரியவில்லை; தாளமும் தெரியவில்லை. எனக்கு எம். எஸ்; எம்.எல்வி டி.கே.பி. தெரியும்; அவர்களுக்கு என்னைத் தெரியுமா?

அதுசரி; மற்றவை பின்,

அக்கா.

0 Comments:

Post a Comment

<< Home