Wednesday, June 09, 2004

அன்புள்ள தங்கைக்கு,

சூரியனை வெள்ளி கடந்து செல்லும் சம்பவம் நாடெங்கிலும் வெகுவாகப் பேசப்பட்டது இல்லையா? டிவியில் பலர் அன்று கோவிலில் வழிபாடுகள் நடத்தினார்கள் என்று கேள்விப்பட்டேன்.லிதுவும் ஒரு கிரகணம் மாதிரிதான் என்று சிலர் சொன்னார்கள்.

நம் பக்கங்களில் கிரஹணம் அனுசரிக்கும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.னாங்கள் சின்னவர்களாய் இருக்கும்போது காவேரிக்கரையில் இருந்தோம். கிரஹணம் என்றால் அது ஆரம்பிக்கும் முன்னால் 6 மணி நேரம் முன்னதாகவே சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். ராத்த்ரி வேளையில் வந்தால் தூங்கி எழுந்தவுடன் கிரஹணம் முடிந்திருக்கும். ஆனால் மத்தியானம் 3 மணி 4 மணீ என்றால் ராத்திரி 9 மணி 10 மணிக்கு கிரஹணம் முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணி கூட குடிக்காமல் காத்திருப்பார்கள். சூரிய கிரஹணமோ சந்திர கிரகணமோ ஸ்வாமி சன்னதியில் விளக்கு எரிய விடுவார்கள். யார் நட்சத்திரத்துக்கு கிரஹணம் பிடிக்கிறதோ அவர்கள் ஒரு பனை ஓலை சுவடி அதாவது பட்டி கட்டிகொண்டுதான் தலைக்கு குளிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் அறையை விட்டு வெளியே வரக்கூடாது. ந்கம் கூட கிள்ள கூடாது. உள்ளே இருக்கும் குழந்தைக்கு ஊனம் ஏற்படாமல் இருக்க இந்த ஏற்பாடு. காவேரி கரை என்பதால் கிரஹணம் என்றால் வீட்டில் குளிக்கக் கூடாது. ஆற்றில்தான் குளிக்க வேண்டும். படுத்திருந்த பாய் தலகாணி இவைகளை தண்ணீரில் நனைத்து உலர்த்த வேண்டும். வீடு பூராவும் கழுவி விட வேண்டும். முதலில் வீட்டு பெரியவர்கள் யாராவது குளிப்பார்கள். எல்லோரும் பட்டினியாக இருந்ததால் முதலில் குளிப்பவர்கள் காபி, பால் போன்றவை தயார் பண்ணுவார்கள். பிறகு சிற்றுண்டியும் ஏதாவது தயாரிப்பார்கள். பழைய மீந்து போன ஆகாரங்களை வெளியில் கொட்டி விடுவார்கள். ஊறுகாய் தயிர், பால் போன்றவற்றிற்கு தர்ப்பை புல்லைப் போட்டு பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.

இப்படி கிரஹணம் என்றாலே பெரியவர்களுக்கு நிறைய வேலைகளும் குழந்தைகளும் பட்டினி கிடந்து பொறுமைக் கற்று கொள்வார்கள்.

ஆனால் இப்போ தலைக்கு குளிக்கிறோம். கிரஹண சமயம் 3 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கிறோ அவ்வளவுதான். யார் நட்சத்திரத்தில் கிரஹணம் பிடித்ததோ அவர்கள் மட்டை தேங்காயுடன் தட்சிணை வைத்து பிராமணருக்கு கொடுக்க வேண்டும். இன்றைக்கு கோயில் போய் அர்ச்சனை பண்ண சமயம் கிடைத்தால் போதும். எல்லாமே பகவான் செயல். அவரின்றி எதுவுமே அசையாது; நடக்காது.

மற்றவை அடுத்த கடிதத்தில்.

உன் அன்புள்ள
அக்கா.

0 Comments:

Post a Comment

<< Home